tamilnadu

img

வங்கி வாராக் கடன்களை செலுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் அவகாசம்

வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்தாத நிறுவனங்களுக்கு வாராக் கடன் பட்டியலில் சேர்ப்பதற்கு கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் வாராக் கடன் செலுத்தாத நிறுவனங்கள் மீது, 180 நாள் கால அவகாசம் முடிந்த பிறகு 34 மின் திட்டங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த திவால் நடவடிக்கையை எதிர்த்து 70 நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதில் மின்துறை, கப்பல் போக்குவரத்து, ஜவுளித்துறை நிறுவனங்கள் அடங்கும்.

இதனை அடுத்து, ரிசர்வ் வங்கி பிறப்பித்த அறிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. இதனால் வாராக் கடன் வசூலில் தொய்வு நிலை ஏற்பட்டது. இதனிடையே புதிய விதிகளை வகுக்கும் முனைப்பில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கு அதை செலுத்துவதற்கு கூடுதலாக 60 நாள் அவகாசம் அளிப்பதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றதாக அறிவித்தது.

நிறுவனங்கள் கடன் பெற்று அதனை, 90 நாட்களுக்குள் செலுத்தாவிடில் அது வாராக் கடனாகக் கருதப்படும். இதன் பிறகு நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்த 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் அதற்குள் நடவடிக்கை எடுக்காவிடில் என்சிஎல்டி-க்கு பரிந்துரைக்கப்படும். ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது 90 நாட்களாக உள்ள அவகாச காலத்தை, கூடுதலாக 30 முதல் 60 நாட்கள் வரை நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது போல் கூடுதல் அவகாசம் அளிப்பதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


;